புதுடெல்லி: ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் தமிழில் புகழஞ்சலி வெளியிட்டார்.
தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த 18-ம் நூற்றாண்டு வீரமங்கை ராணி வேலு நாச்சியார். சேதுபதி ராஜாவின் ஒரே மகளான வேலு நாச்சியார் போர்க்கலைகள், குதிரையேற்றம் போன்றவற்றையும் அறிந்தவர். பிரெஞ்சு, உருது என பல மொழிகளையும் கற்றவர். காளையார் கோவில் போரில், அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை, ஆற்காடு நவாப்பின் மகன் தலைமையிலான ஆங்கிலேயர் படை கொன்றது. அதன்பின் திண்டுக்கல்லில் 8 ஆண்டுகள் வசித்த வேலு நாச்சியார், அங்கு ஆட்சி செய்த கோபால் நாயக்கர், மைசூர் சுல்தான் ஹைதர் அலி ஆகியோரின் ஆதரவுடன், தனது சாம்ராஜ்ஜியத்தை கடந்த 1780-ம் ஆண்டு மீட்டார்.
ஆங்கிலேயர்களையும், ஆற்காடு நவாப்பையும், போரில் வீழத்தி வீர மங்கை என்ற பட்டத்தை ராணி வேலு நாச்சியார் பெற்றார். இவரது வீர தீர செயலை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு நினைவு தபால் தலையும் வெளியிட்டது.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளான நேற்று, பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார். ட்விட்டர் பதிவில் அவர் தமிழில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது வீரம், வரும் தலை முறையினருக்கும் உத்வேகம் அளிக்கும்.’’ இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.