சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜன.13-ம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரம், கான்ரான்ஸ்மித் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பான பணிகளை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். ஆய்வுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரத்தை குறிப்பிட்டு தெரு வாரியாக, வீடு வீடாக நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜன.9-ம் தேதி தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 4 நாட்கள் நியாயவிலை கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 12-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும்.
பரிசுத் தொகுப்பு மற்றும் மாதம்தோறும் வழக்கமாக வழங்கப்படும் பொருட்களில் 60 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 2 நாட்களில் முழுமையாக கொண்டு சேர்க்கப்படும். பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும்.
17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் பணிகளை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.