தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா முதன் முதலாக தோன்றிய சீனாவில் தற்போது தொற்று வேகம் எடுத்து வருகிறது. இதே போன்று ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் தொற்று பரவல் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த நாடுகளில் பிஎப்.7 உருமாறிய கொரோனா ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் சீனா உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிற ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 சதவீத பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே கொரோனா பரவலைத்தடுக்கிற நோக்கத்தில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் 3-வது, 4-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நோய் எதிர்ப்புச்சக்தி குறைவானவர்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை கடந்த 26-ந் தேதி சந்தித்து, சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் 4-வது டோஸ் தடுப்பூசி (இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி) போட பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில், 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அவசியம் இல்லை, அதற்கான செயல்திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்னும் 3-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை. எனவே 2-வது பூஸ்டர் டோசுக்கு அவசியம் எழவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளைக் கொண்டு 2-வது பூஸ்டர் டோஸ் போடுவதற்கு தரவுகள் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
newstm.in