புதுடெல்லி: திரையரங்குகளில் வெளி உணவு கொண்டு வரும் விவகாரத்தில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை இலவசமாக திரையரங்குகளில் வைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள், வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திரையரங்குகளில் விற்கப்படும் பண்டங்களின் விலை இரண்டு மடங்காக இருக்கிறது. தண்ணீர் எடுத்துச் செல்வதற்குக்கூட பல இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது நீண்டகால பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம், திரையரங்குகளுக்குள் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ‘‘திரையரங்குகள் என்பது தனிப்பட்ட சொத்துக்கள் என்பதால் நுழைவுகள் உட்பட தனி கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமையை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். இதுபோன்ற தடைகள் பாதுகாப்பை உறுதி செய்யும். விமான நிலையங்களில் இதுபோன்ற நடவடிக்கையை பார்க்க முடியும். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் சினிமா ஒழுங்குமுறை விதி 1975 என்ற விதி திரையரங்குக்குள் சாப்பிடக்கூடிய பொருட்களை அனுமதிக்கவில்லை’’ என தெரிவித்தார். வழக்கின் எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், ‘‘ உணவை எடுத்து வர அனுமதி இல்லை என்று டிக்கெட்டில் அச்சிடப்படவில்லை. இதனால் உணவு பொருட்களை திரையரங்குக்குள் எடுத்துச்செல்ல தடை விதிக்க முடியாது’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘‘திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கத்திற்கு உள்ளே உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவது தொடர்பான விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது. அதே நேரம் திரைப்படம் பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு தனிப்பட்ட உரிமை உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது. வெளி உணவு பொருட்களை திரையரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வர்த்தக ரீதியான முடிவு. அதில் தலையிட முடியாது. எனவே திரைப்படம் பார்ப்பவர்கள் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக ஒருவர் ஜிலேபியை வாங்கிக்கொண்டு திரையரங்கத்திற்குள் செல்கிறார் என்றால், அவர் சாப்பிட்டுவிட்டு அங்கேயே இருக்கக்கூடிய நாற்காலியில் கைகளை துடைத்து அதனை அசிங்கப்படுத்தி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த தருணத்தில் அது திரையரங்க உரிமையாளர் அத்தகைய உணவை எடுத்து வர அனுமதி இல்லை எனக்கூற அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தரமான மற்றும் சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில் வைக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது’’ என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.