திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் அதிகாலை நடந்தது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் விஐபி பாஸ் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாஜ ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் திருவேங்கடம், முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் மிலிட்டரி நடராஜன், மண்டல தலைவர் சதீஷ் உள்பட 10க்கும் மேற்பட்ட பாஜ நிர்வாகிகள், கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் தங்களுக்கு விஐபி பாஸ் ஏன் வழங்கவில்லை என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக இணை ஆணையர் மாரிமுத்துவின் புகாரின்படி ஸ்ரீரங்கம் போலீசார், திருவேங்கடம், மிலிட்டரி நடராஜன், சதீஷ் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.