தலிபான்கள் மீது தாக்குதல் | இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் மீண்டும் ஏற்படும் – பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

புதுடெல்லி: தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான ஜனநாயக ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் கவிழ்ந்ததும், தலிபான்களை பாராட்டிய சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இதை தனக்கு சாதகமான வெற்றியாக பாகிஸ்தான் கருதியது. பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்று தலிபான்களின் வெற்றியை கொண்டாடினார். ஆப்கானிஸ்தானை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சித்தது.

ஆனால் நடந்தது வேறு. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதும், தெக்ரிக்-இ-தலிபான் (டிடிபி) அமைப்பின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. பாகிஸ்தானுடன் செய்திருந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை டிடிபி கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி திரும்பப் பெற்றது. இதையடுத்து பலுசிஸ்தான் பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்தன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையிலும், மோதல்கள் அதிகரித்தன. கடந்த டிசம்பர் மாதம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், தலிபான்கள் இடையே கடும்சண்டை ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு சவால் விடுக்கும் வகையில் தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செல்பாடுகள் உள்ளன. பாதுகாப்பு, நீதித்துறை, உளவுத்துறை என பல அமைச்சகங்களையும் உருவாக்கியுள்ளதாக டிடிபி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக டிடிபி உருவாகியுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் 40வது கூட்டம் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில்பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகளுக்கு சரியான பதிலடிகொடுக்க முடிவு செய்யப்பட்டது.தீவிரவாதிகள் பாகிஸ்தானின் எதிரிகள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலிபான் உறுப்பினர் அகமது யாசிர் என்பவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பாகிஸ்தான் உள்துறை அமைச்சரே! உங்கள் முடிவு அருமை! இது ஆப்கானிஸ்தான். பெருமிதமான சாம்ராஜ்ஜியத்தின் சமாதி. எங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த நினைக்காதீர். நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டு போரில் இந்திய ராணுவத்திடம் சரணடைந்த அவமானமான சூழல்மீண்டும் ஏற்படும்’’ என கூறியுள்ளார். அத்துடன் இந்திய ராணுவத்திடம், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டில் வங்கதேச விடுதலைக்காக இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் வீரர்கள் 93,000 பேர் டாக்காவில், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். இதையடுத்து வங்கதேசம் சுதந்திர நாடானது குறிப்பிடத்தக்கது. இதைசுட்டிக்காட்டி பாகிஸ்தானை, தலிபான்கள் கிண்டல் செய்துள்ளனர். பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தலிபான்கள் தற்போது அவர்களுக்குஎதிராகவே திரும்பியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.