புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவியில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான செயல் திட்டங்களை கட்சியின் காரியக் கமிட்டி விரைவில் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் கட்சியின் புதிய தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிரந்தர நிர்வாகிகள் பதவியில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை அமர்த்த கட்சியின் காரியக் கமிட்டி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டை ராய்ப்பூரில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த மாநாட்டின்போது கட்சியின் தலைவராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு கார்கேவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டின்போது காரியக் கமிட்டி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சோனியாவும் ராகுலும் இந்த உள்கட்சித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அதே நேரத்தில், சோனியா காந்தி குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வெளியே இருந்தாலும் கட்சியின் முக்கிய அங்கத்தினர்களாகவே இருக்கிறார்கள்.
மேலிடத் தலைவர்கள் என்ற அந்தஸ்தில் அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களிடம் கேட்டு கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அவர்களை கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவியில் அமர்த்த காரியக் கமிட்டி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மாநாட்டின்போது அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செயல்திட்டங்களை காரியக் கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மாநாடு குறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கூறும்போது, “இந்த 3 நாள் மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள், விவசாயம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். காரியக் கமிட்டி தேர்தல் குறித்தும் அப்போது அறிவிப்பு வெளியாகும். இந்த விவகாரங்களில் கட்சி தனது வியூகத்தை வகுத்த பின்னர் மாநாட்டு தீர்மானங்கள் வெளியிடப்படும்” என்றார்.