சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஜன.12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக 15,619 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 3 நாட்களும் சேர்த்து 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோர் வசதிக்காக, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,334 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 4,985 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,619 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
அனைத்து இருக்கைகளும் நிரம்பிய அரசு விரைவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளை அடையும். எனவே, தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் வண்டலூர், கிளாம்பாக்கம் சென்றுபயணம் மேற்கொள்ள வேண்டும்.
முதல்முறையாக முன்பதிவு: கோயம்பேட்டில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பூந்தமல்லியில் இருந்து ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலத்தில் இருந்து பெங்களூரு போன்ற இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணிக்க தற்போது முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருப்போரூர் – செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.
அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லியில் தலா ஒன்று என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் ஜன.12 முதல் 14-ம் தேதி வரை செயல்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் TNSTC செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள 94450 14450 மற்றும் 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
20 தகவல் மையங்கள்: இதுதவிர, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு மையமும், முக்கிய பேருந்து நிலையங்களில் 20 தகவல் மையங்களும் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கடந்த தீபாவளி போலவே, பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பான வகையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து கட்டணத்தை உரிமையாளர்களே நிர்ணயம் செய்துள்ளனர். தீபாவளியின்போது, போதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அதிக கட்டணம் நிர்ணயித்த 6 ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில், அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் பயணிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டது. கரோனா தொடர்பாக சுகாதாரத் துறை வழங்கும் அறிவுரைகள் பின்பற்றப்படும். பைக் டாக்ஸி போன்றவற்றுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.