புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, கடைசி வரை பரபரப்பைக் கூட்டி படபடக்க வைத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது.
போட்டிக்கு முன்பாக டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ‘இந்த பிட்ச் சேஸிங்கிற்கு உகந்ததுதான். ஆனால், நாங்கள் சேஸிங்க் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே சவாலளித்துக் கொள்ள விரும்புகிறோம். அதனால், நாங்கள் டாஸ் வென்றிருந்தால் கூட முதலில் பேட்டிங்தான் செய்திருப்போம்’ என முழு நம்பிக்கையோடு பேசியிருந்தார். பேசியதற்கு ஏற்பவே முன்னிருந்த சவாலையும் இந்திய அணி சிறப்பாக சமாளித்து வென்றிருக்கிறது.
இலங்கை அணியின் சார்பில் ரஜிதா முதல் ஓவரை வீசியிருந்தார். இந்த முதல் ஓவரிலேயே இஷன் கிஷன் அதிரடியை தொடங்கிவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். இஷன் கிஷன் மட்டும் 14 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், இந்த அதிரடியெல்லாம் அடுத்தடுத்து தொடரவில்லை. இலங்கை அணியின் பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர் மஹீஸ் தீக்சனா மூன்றாவது ஓவரிலேயே சுப்மன் கில்லை lbw ஆக்கி வெளியேற்றினார். சூர்யகுமார் யாதவும் வந்த வேகத்தில் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்து பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே கருணாரத்னேவின் ஓவரில் அவுட் ஆகிவிட்டார். சஞ்சு சாம்சனும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் வந்த வேகத்திலேயே தனஞ்செய டி சில்வா பந்தில் வெளியேறினார். இதன்பிறகு, ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து ஆடினார். ஆயினும் ரன்ரேட்டில் பெரிய பாய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை. 14.1 ஓவரில் மதுஷங்கா பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆன போது இந்திய அணியின் ஸ்கோர் 94 மட்டுமே. ரன்ரேட் 6 ஐ சுற்றிதான் இருந்தது. ஆனால், 20 ஓவர் முடிகையில் இந்திய அணி 162 ரன்களை எடுத்திருந்தது.
கடைசி 5.5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 68 ரன்களை சேர்த்திருந்தது. ரன்ரேட் 10 க்கும் மேல். இதற்கு மிக முக்கிய காரணம் தீபக் ஹூடாவும் அக்சர் படேலும் அமைத்த பார்ட்னர்ஷிப் மட்டுமே.
அதுவரை தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை ஹூடா தனது அதிரடி மூலம் தூக்கி நிறுத்தினார். சிக்கனமாக வீசி மிரள வைத்துக் கொண்டிருந்த வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்சனா ஆகியோரின் ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இந்த இருவரின் ஓவர்களிலும் இந்த இப்போட்டியில் வேறெந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சிக்சரே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்சர் படேலும் அதிரடியாக ஒத்துழைப்பு வழங்க இந்திய அணி 162 ரன்களை தொட்டது.
இலங்கைக்கு டார்கெட் 163. ஆனால், இலங்கை அணியால் 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 162 ரன்களை டிஃபண்ட் செய்ததே ஒரு பெரும் சாதனையாகும். அறிமுக வீரர் சிவம் மவி, உம்ரான் மாலிக், அக்சர் படேல் ஆகியோரே பந்துவீச்சு மூலம் இந்த வெற்றிக்கு வித்திட்டனர்.
சிவம் மவி 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பவர்ப்ளேயில் மட்டும் 2 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கொடுத்திருந்தார். லெந்த்தை மாற்றி மாற்றி வீசி பேட்ஸ்மேன்களை செட் செய்து அபாரமாக வீழ்த்தினார். நிஷாங்கா, தனஞ்செய டி சில்வா இருவரையுமே இரண்டு பவுண்டரிகள் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியிருப்பார். கொஞ்சம் ஷார்ட் பிட்ச்சாக வீசி செட் செய்துவிட்டு அதன்பிறகு ஃபுல்லாக வீசி விக்கெட்டை வீழ்த்தினார்.
நிஷாங்காவின் பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் பந்து புகுந்து சென்று ஸ்டம்பை தாக்கிய விதமெல்லாம் டெஸ்ட் மேட்ச் பார்ப்பதை போன்ற உணர்வை கொடுத்தது.
பவர்ப்ளே மட்டுமில்லை, கடைசியில் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது 18 வது ஓவரிலுமே வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து போட்டியை உயிர்ப்போடு வைத்திருக்க காரணமாக அமைந்தார். அறிமுக போட்டியிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் சிவம் மவி. உம்ரான் மாலிக்கும் மிரட்டலாக வீசியிருந்தார். குறிப்பாக, அவர் வீழ்த்திய தசுன் சனாகாவின் மின்னல் வேக விக்கெட் அபாரம்.
155 கி.மீ வேகத்தில் அந்த பந்தை வீசியிருந்தார். ட்ரேட்மார்க் உம்ரான் மாலிக் டெலிவரி!
அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்திருந்தார். எக்கானமி ரேட் 10 க்கும் மேல் இருந்தது. விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆயினும், அக்சர் படேலும் ஒரு மேட்ச் வின்னர்தான். காரணம், அவர் வீசிய அந்த கடைசி ஓவர். 13 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழலில் அட்டகாசமாக அந்த ஓவரை வீசியிருந்தார். ஒரே ஒரு சிக்சரை வழங்கினார் என்பதை தவிர அந்த ஓவரில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. வேகமாறுபாட்டை கச்சிதமாக அந்த கடைசி ஓவரில் அக்சர் உபயோகித்திருந்தார். வழக்கத்தை விட அதிக வேகமாக சில பந்துகளை உடம்புக்குள் வீசியிருந்தார்.
101, 105, 108, 109 கி.மீ அவர் வீசியிருந்த 6 பந்துகளில் 4 பந்துகளின் வேகங்கள் இவை. இடையில் இரண்டு பந்துகளை 80 கி.மீ வேகத்தை சுற்றி ஒயிட் லைனுக்கு அருகே துல்லியமாக வீசியிருந்தார்.
இந்த வேகமாறுபாடும் லைன் வித்தியாசமும்தான் அக்சர் அந்த இறுதி ஓவரை வெற்றிகரமாக வீச காரணமாக அமைந்தது.
இந்திய அணி இந்த புத்தாண்டை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. இந்த வெற்றி அப்படியே இந்த ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.