அதிர்ச்சி…சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் சமையல் செய்ய தடை!…

சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய அனுமதியில்லை என்று தேவஸ்தானம் சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலைநடை திறக்கப்பட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வருகிற 90 ஆயிரம் பக்தர்கள் தவிர, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு வசதியை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

இதனால் கடந்த 4 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இந்த நிலையில் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்க சபரிமலைக்கான சிறப்பு அதிகாரியான கூடுதல் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அதிகாரி அஜி, துணை அதிகாரி தபோஸ் பஸ்மதரி, செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், துணை கமாண்டர் விஜயன் மற்றும் அனைத்து துறை முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஜனவரி 11-ந் தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்ற பின்னரே ஊருக்கு திரும்புவார்கள். எனவே சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

அதை சமாளிக்க தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று சிறப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், சன்னிதானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்படும் என்றார். இதன் தொடர்ச்சியாக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும் என்று கூறிய அவர், சமையல் செய்யும் பாத்திரங்களை சன்னிதானத்தில் விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் வருவாய், தேவஸ்தானம், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் நின்று 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று கூறினார். அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஆங்காங்கே ஆம்புலன்ஸ் நிறுத்தவும் ஏற்பாடு செய்து உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சன்னிதானத்தில் வெடிமருந்து கொட்டகையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து, சன்னிதானத்தில் தங்கி இருப்பவர்கள் யாராவது வெடி பொருட்களை வைத்து உள்ளரா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.