விஜயபுரா : மடாதிபதி சித்தேஸ்வரா உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவரது மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு தலைவர்கள் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஜயபுராவில் உள்ள ஞானயோகி ஆசிரமத்தை சேர்ந்த மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமிகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆசிரமத்திலேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பக்தர்கள், மடாதிபதியை சந்திக்க ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் கடந்த 31ம் தேதி சென்று சந்தித்து மடாதிபதியிடம் நலம் விசாரித்தனர். டாக்டர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியும் போனில் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி மடாதிபதி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் கன்னடத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மடாதிபதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயபுரா ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர் மீது தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மாலையில் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடாதிபதி சில ஆண்டுக்கு முன் உயில் எழுதி வைத்திருந்தார்.
அதில் ‘தன் உடலை எளிய முறையில் தகனம் செய்ய வேண்டும்’ என எழுதி வைத்திருந்தார். அதன்படி அவரது உடலுக்கு ஞானயோக ஆசிரமத்தில் நேற்று இறுதி சடங்கு நடந்தது.
இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரஹலாத் ஜோஷி உட்பட பிரமுகர்கள் பங்கேற்று மடாதிபதியின் சிதைக்கு நெய் ஊற்றி, பூஜை செய்தனர். பின் மடத்தின் பொறுப்பாளர் பசவலிங்க சுவாமிகள் சிதைக்கு தீ வைத்தார்.
இதில் ஏராளமான அரசியல்வாதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
சித்தேஸ்வர் மறைவை முன்னிட்டு நேற்று விஜயபுரா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்