நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக நுழைந்து பிறகு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மாறி தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கென்று பெரும் ரசிகர்க் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சிவகார்த்திகேயனை மிகவும் விரும்புகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. அந்த இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேக் டூ பேக் 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன் நுழைந்தார். இதனைப் பார்த்து கோலிவுட்டே ஆச்சரியம்தான் பட்டது.
இந்தச் சூழலில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரிய ரைபோஷப்கா, பிரேம்ஜி அமரன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் பிரின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இப்படம் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வந்ததையடுத்து இந்த படம் வசூலில் பயங்கரமான அடி வாங்கியது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அது ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தையே அளித்தது.
இதனை தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படத்துக்கான நஷ்ட ஈடாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தில் 50 சதவிகிதத் தொகையை விநியோகஸ்தருக்கு திருப்பி அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிட்டிருந்த நிலையில், விநியோகஸ்தருக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து நஷ்டத்தில் 50 சதவிகிதத் தொகையான 6 கோடி ரூபாயை விநியோகஸ்தருக்கு திருப்பியளித்துள்ளனர்.