இடாநகர்: அருணாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் ரூ.724 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 28 திட்டங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கிவைத்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சிக்கிமின் டோக்லாம் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. கடந்த டிசம்பர் 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி, விரட்டியடித்தனர். சிக்கிம், லடாக், அருணாச்சலபிரதேச எல்லைப் பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சாலை, பாலம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உட்பட எல்லையோர மாநிலங்களில் ரூ.724 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 28 திட்டங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கிவைத்தார்.
அருணாச்சல பிரதேசத்தின் அலோங்-யின் கியோங் சாலையில் புதிதாக கட்டப்பட்ட சியோம் பாலத்தில் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: எல்லையில் முகாமிட்டிருக்கும் பாதுகாப்புப் படைகளின் வசதிக்காக சாலை, பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா போரை விரும்பவில்லை. ராமர், புத்தரின் போதனைகளின்படி அமைதியை விரும்புகிறோம். இது போருக்கான காலம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
எனினும் இந்தியா மீது போரை திணித்தால் தீரமுடன் எதிர்கொள்வோம். அனைத்துவிதமான அச்சுறுத்தல்களில் இருந்தும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் எதற்கும் தயார் நிலையில் உள்ளன.
இப்போது சிக்கிம், அருணாச்சலபிரதேசம், காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிர்கால சவால்களை சமாளிக்க வலுவான, தன்னம்பிக்கையான புதிய இந்தியாவை உருவாக்கும் லட்சியத்துடன் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்த 28 திட்டங்களில் 8 திட்டங்கள் லடாக்கில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் 5, காஷ்மீரில் 4, சிக்கிம், உத்தராகண்ட், பஞ்சாபில் தலா 3, ராஜஸ்தானில் 2 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் அலோங்-யின் கியோங் சாலையில் சியோம் நதி மீது கட்டப்பட்டுள்ள சியோம் பாலம் ராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். 100 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் மூலம் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.