சூர்யா சமீபகாலமாக மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அப்படி அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இதில் ஜெய்பீம் படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றதுடன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் ஒட்டுமொத்தமாக அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். எனவே ரோலக்ஸ் கதாபாத்திரம்தான் விக்ரம் படத்துடைய அடுத்த பாகத்தின் லீட் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றன. இது ஒருபக்கம் இருக்க நீண்ட வருடங்களுக்கு பிறகு பாலாவுடன் வணங்கான் படத்திலும், முதல்முறையாக வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் சூர்யா கமிட்டாகியிருக்கிறார்.
இதில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்து அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலானது. இதற்கிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார்.
இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கும் சூர்யா கமிட்டாகியிருக்கிறார்.பீரியட் படமாகவும், பான் இந்தியா படமாகவும் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன்போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. படம் 10 மொழிகளில் வெளியாகிறது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சூர்யா 42′ படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பென் ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் இதனை வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.