இபிஎஸ் அணியில் சரவணன்: ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன் தெரியுமா?

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன்

முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகிய அவர் மீண்டும் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் சரவணன். சில மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அன்றைய தினமே சென்ற மருத்துவர் சரவணன் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து விலகினார்.

பாஜகவிலிருந்து விலகிய பின்னர் மீண்டும் அவர் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அவரது இல்லத் திருமண விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார். திமுகவில் இணைவதற்கு அவர் சில முயற்சிகள் எடுத்ததாகவும் ஆனால் மதுரை திமுக முக்கிய நிர்வாகிகள் அதற்கு முட்டுகட்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்றும் யூகங்கள் கிளம்பின. இந்த சூழலில் அவர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார்.

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அடிப்படையில் ஒரு மருத்துவர், சமூக ஆர்வலர். மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்வதற்கு எனக்கு ஒரு தளம் வேண்டும். அதனாலே அதிமுகவில் இணைந்தேன். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நான் மக்களிடையே நல்ல அறிமுகம் பெற்றவன். அதிமுகவில் நான் இணைந்துள்ள நிலையில் சமூக நலப் பணிகளை அதிகளவில் செய்ய முடியும்” என்று கூறினார்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை வைத்திருந்தார். அவர் சுய நினைவுடன் கைரேகை வைக்கவில்லை என்று திமுக சார்பாக மருத்துவர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் செய்தியாளர்கள் அது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “நான் அப்போதிருந்த கட்சி தலைமை கூறியதால் வழக்கு தொடர்ந்தேன். அது அம்மா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அல்ல. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கு” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.