ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் 2-ம் நாள் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 23-ம் தேதி பகல் பத்து தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களிலும் ஶ்ரீ ஆண்டாள், ரெங்க மன்னார், ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினர். அனைைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு பெருமாள் மோகினி அவதாரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று இரவு ஶ்ரீவடபத்திரசாயி கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபம் எனும் ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.
அனைத்து வைணவ கோயில்களிலும் ராப்பத்து உற்சவத்தின் போது இருபுறமும் ஶ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிப்பார். ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமால், இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரெங்கமன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சி அளிக்கிறார். ராபத்து உற்சவத்தின் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், திருமொழி பாடல்கள், வியாக்யான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது