காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஏ.எஸ்.பாபு சா பட்டுச்சேலை விற்பனை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வருமான வரித்துறையினரின் சோதனையை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள், செய்தி சேகரிக்க கூடாது என கூறியதால் செய்தியாளர்களுக்கும், வருமானவரித் துறையினருக்கும் கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு நிலவியது
சுற்றுலாத்தலமானதும், பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத் தெருவில் பிரபல தனியார் பட்டுச் சேலை விறபனை கடையான ஏ.எஸ்.பாபு சா பட்டுச்சேலை விற்பனை கடை இயங்கி வருகிறது.இக்கடையில் நாள்தோறும் ஆந்திரா, கர்நாடக, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் பட்டுச் சேலைகளை வாங்கி செல்வது வழக்கம்.
நாள்தோறும் பல கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் இக்கடையில் அவ்வப்போது வருமான வரித்துறையினரின் சோதனைகளும் நடைபெற்று, பல்வேறு ஆவணங்களை எடுத்து செல்வதுமாக இருக்கும்.
இந்நிலையில் தற்போது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகைக் காலத்தை ஒட்டி, கடையில் விற்பனை களைக்கட்டியுள்ள நிலையில் இன்று, வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால், கடையில் பட்டுச்சேலை வாங்க வந்தவர்கள் அனைவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், கடை முதலாளிகளின் வீடு கடை உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறையினரின் சோதனையின்போது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வருமானவரித்துறை அதிகாரிகள் தடுத்ததோடு, கடையின் நுழைவு வாயில் முன்பு வீடியோ பதிவும் செய்யக் கூடாது, செய்தி சேகரிக்கக்கூடாது என்று கண்டிப்புக் காட்டியதால் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
செய்தியாளர்களின் கடமையை செய்யவிடாமல், பத்திரிக்கை சுதந்திரத்தை குலைக்கும் வருமானவரித்துறையினருக்கு, பத்திரிகையாளர்கள் கடும் ஏதிர்ப்பு தெரிவித்தனர். வருமானவரித் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மற்ற பட்டுச்சேலை கடை உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.