ஆவினில் முறைகேடு: 236 பணி நியமனங்கள் ரத்து!

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2021ஆம் ஆண்டு ஆவினில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரையில் 47 பேர், திருச்சியில் 40 பேர், தேனியில் 38 பேர், திருப்பூர் 26 பேர், விருதுநகர் 26 பேர், நாமக்கல் 16 பேர், தஞ்சாவூரில் 8 பேர் என்று மொத்தம் 236 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், முறைகேடு நடைபெற துணையாக இருந்ததாக கருதப்படும் 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், விருதுநகர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் சுமார் 6 அதிகாரிகளிடமிருந்து ரூ.2,47,900 தண்டத் தொகை வசூல் செய்யவும், திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாகக் குழுவை கலைத்தும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையை பொறுத்தவரை, மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இவ்விரண்டு ஆண்டுகளிலும் மேலாளர், உதவி பொது மேலாளர், எஸ்.எப்.ஏ., உட்பட 61 பணியிடங்கள் மதுரை ஆவினில் நேரடியாக நியமிக்கப்பட்டன. அப்போதைய பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா தலைமையிலான தேர்வுக் குழு எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி நியமனம் செய்தது. இதில் விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, அருப்புக்கோட்டை பகுதி ஒரு கிராமத்தில் 17 பேர் தேர்வானது, வங்கி டி.டி., மாற்றி விண்ணப்பித்தது, தகுதியுள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

அதன்பேரில், ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால்வளம் துணைப் பதிவாளர் தலைமையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்தது. இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இதுதொடர்பான அறிக்கை கமிஷனர் சுப்பையனுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து அந்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட மேலாளர் (தீவனம்), மேலாளர் (எம்.ஐ.எஸ்.,) மேலாளர் (பொறியியல்), முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் நியமனங்களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81இன் கீழ் ரத்து செய்து சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அப்போதைய ஆவின் மேலாளர் (நிர்வாகம்) காயத்ரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.