புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மூதாட்டி பயணி மீது சக பயணி ஒருவர் போதையில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர்-இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர், ‘பிஸினஸ் கிளாஸ்’ இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண் ஒருவர் மீது தனது பேன்ட் ஜிப்பை கழற்றிவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். தனது உடைகள் சிறுநீரால் நனைந்த நிலையில், அவர் கழிவறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டார். இருந்தும் அவரது இருக்கையில் சிறுநீரின் துர்நாற்றம் வீசியதால், அவரது இருக்கையில் அமரமுடியாது தவித்தார். அவருக்கான மாற்று இருக்கையும் ஏற்பாடு செய்து தரவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு மாற்று இருக்கை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பயணி, டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு விமானத்தில் நடத்த சம்பவம் தொடர்பாக கடிதம் எழுதினார். அவர், இவ்விஷயத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.
அதையடுத்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் அறிக்கை கோரியுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நவம்பர் 26ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விமான நிறுவனத்திடம் அறிக்கை கோரியுள்ளோம். பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி விமான நிலைய போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.