கடலூர்: உதவியாளரின் மாமனார், மாமியாரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத்திடம், அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர், உதவியாளராக இருந்து வந்தார். பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன்பிறகு குமார், எம்.சி.சம்பத்திடம் வேலைக்கு செல்லவில்லை.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் குமாரின் மாமனார் ராமச்சந்திரன் (72), மாமியார் ஜோதி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்படி, பண்ருட்டி போலீசார், எம்.சி.சம்பத், எம்.சி.தங்கமணி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், மாஜி அமைச்சர் சம்பத் மீது வழக்கு பதிவு ெசய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் நேற்று அதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனிடையே எம்.சி.சம்பத் சார்பில் அவரது வக்கீல் மாசிலாமணி, கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.