புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த இருவேறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அம்மாநிலத்திற்கு கூடுதலாக 18 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் டாங்கிரி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர். அதே கிராமத்தில் மறுநாள் காலை ஐஇடி குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. 4 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவங்களை அடுத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் டாங்கிரி கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, பாதுகாப்பு இல்லாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும், தங்களின் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கூடுதலாக 18 துணை ராணுவப் படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் மொத்தம் 1,800 வீரர்கள் இருப்பார்கள் என்றும், இவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து 8 கம்பெனி துணை ராணுவப் படைகளும், டெல்லியில் இருந்து 10 கம்பெனி துணை ராணுவப் படைகளும் விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.