மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து ஆவின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஆவின் நிறுவனத்தில் 2020-21ல் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடந்தது. அன்றைய பொது மேலாளராக பணியில் இருந்த ஜனனி சவுந்தர்யா என்பவர் தலைமையிலான தேர்வுக்குழு சம்பந்தப்பட்டோருக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் நடத்தியது. விண்ணப்பிக்காமலே நேரடியான தேர்வுக்கு அழைத்தது, தகுதியானவர்களை அழைக்காதது, அருப்புக்கோட்டை பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 17 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்சைகள் எழுந்தன.
இது குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் பால்வளத் துணைப் பதிவாளர் தலைமையில் தொடர் விசாரணை நடந்தது. இவ்விசாரணையில், தகுதியான வர்களுக்கு திட்ட மிட்டு நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பாதது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்த அறிக்கை ஒன்று ஆவின் நிர்வாக ஆணையர் சுப்பையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் 2020-2021ல் மதுரை ஆவின் நிறுவனத்தில் நியமனம் பெற்ற மேலாளர் (தீவனம்), மேலாளர் (எம்.ஐ.எஸ்.,) மேலாளர் (பொறியியல்), முதுநிலைப் பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என, சுமார் 47 பேரின் நியமனங்களை ரத்து செய்யவேண்டும் என, ஆவின் பொது மேலாளருக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், அன்றைய ஆவின் மேலாளர் (நிர்வாகம்) மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இது மதுரை ஆவின் நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.