சபரிமலையில் கடினமான புல்மேடு பாதையில் 37,515 பேர் பயணம்; 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.! இன்று 90 ஆயிரம் பேர் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 10 மணிநேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகரவிளக்கு கால பூஜை தொடங்கிய கடந்த 31ம் தேதி முதல் தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் வந்தால் நெரிசல் ஏற்படும் என்பதால் தினசரி ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் எதிர்பார்த்ததை விட சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் பக்தர்கள் உடனுக்குடன் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18ம்படியில் இந்திய பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த உடல்திறன் மிக்க போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விரைந்து செயல்பட்டு பக்தர்களை 18ம் படி ஏற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 4500க்கும் அதிகமான பக்தர்கள் 18ம் படி வழியாக எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஆன்லைன் மூலம் 89,971 பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். இது தவிர உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இன்றும் பக்தர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. சபரிமலைக்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் வந்த பக்தர்களால் இரவு 10 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலைக்கு இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு வனப்பகுதி வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். சத்ரம் என்ற இடம் வரை வாகனங்களில் சென்று பின்னர் சுமார் 12 கி.மீ வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும். இது மிகவும் கடினமான பாதையாகும். செல்லும் வழியில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இந்தப் பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் பாதையில் 5 மணி நேரம் தொடர்ந்து நடந்தால் மட்டுமே சன்னிதானத்தை அடைய முடியும். பிற்பகல் 2 மணிக்கு மேல் சென்றால் சன்னிதானத்தை அடைவதற்குள் இருட்டாகிவிடும் என்பதால் 2 மணிக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  செல்லும் வழியில் 4 இடங்களில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வனத்துறையினர் வசதி செய்துள்ளனர்.  இந்த வருடம் புல்மேடு பாதையில் 37,515 பக்தர்கள் சென்று உள்ளனர். 1494 பேர் திரும்பிச் சென்று உள்ளனர். பெரிய பாதை என்று அழைக்கப்படும் எருமேலி பாதையில் இந்த வருடம் 1.30 லட்சம் பக்தர்கள் சென்று உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.