புதுச்சேரி: தொடக்க நிலையில் நடக்கும் ஜி20 மாநாடு வரும் 31-ல் புதுச்சேரியில் நடக்கிறது என்பது சிறப்பு என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற ‘G20 சின்னம் காட்சிப்படுத்துதல்’ நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் G20 செல்ஃபி மையம் (Selfie Centre) திறந்து வைத்து, வெளிப்புற விளம்பர பதாகைகள் (Outdoor Branding Standdies), G20 அடையாள வில்லை (Badge), சுவரொட்டி (Posters) ஆகியவற்றை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: “ஜி20 மாநாடு பாரத பிரதமரின் கனவு திட்டம். ஜி 20 மாநாட்டுக்கு இந்திய தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது அது டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அத்தனை மாநிலங்களுக்கும் அதற்கான வாய்ப்பைத் தரவேண்டும் என்று வாய்ப்பு அளித்ததற்கு பிரதமருக்கு நன்றி.
மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும்போது அந்தந்த தலைநகரங்களில் தான் நடைபெற்றது. அதில் தொடக்க நிலையில் நடைபெறும் முதல் மாநாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது என்பது சிறப்பு. ஜனவரி 31-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தோடு இணைந்து வருவது நமக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகும்போது அதுபற்றி விமர்சனம் வந்தது. ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு சென்றது கரோனா நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு கிடைத்த உதவி, நம்மால் வெளிநாடுகளுக்கு கிடைத்த உதவி, ஜி20 மாநாட்டின் தலைமை நிலை நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு.
ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது என்ற பிரம்மாண்டமான நிலையை மத்திய ஆட்சி இந்தியாவுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இப்போது வளர்ந்து வரும் நாடு என்ற பெயரைப் இந்தியா பெற்றிருக்கிறது. பாரதப் பிரதமர் இந்தியா 2030க்குள் ஐந்து டிரில்லியன் நாடாக பொருளாதார நிலையை அடைய வேண்டும். நாம் கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அந்த பயணம் நிச்சயமாக வெற்றிகரமாக தான் தரும் என்று சொன்னார்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “ஜி 20 பிரதிநிதிகள் மாநாடு புதுச்சேரியில் நடப்பது சுலபமானதல்ல. பல நாட்டினவரும் பங்கேற்பார்கள். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில் பிரதமர் மோடி உள்ளார். அது எளிதானல்ல. உலகம் உற்று பார்க்கும் நிலையில் இந்தியா உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இந்தியாவையும், பிரதமரையும் கேட்டு எடுக்கவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது பெருமை.
பருவநிலை மாற்றம், குழப்பங்கள், உலக பிரச்சினைகள் அதனால் ஏற்படும் போர் போன்றவற்றை சரி செய்ய ஆலோசிக்கும் நிலையுள்ளது. அதில் உள்ள பெருமையை எண்ணி பார்க்கவேண்டும். புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த வாழும் பூமி என்பதால் இங்கு எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும். உலகம் புதுச்சேரியை உற்றுபார்க்கும் நிகழ்வு நடக்கிறது.” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார், தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, ஆட்சியர் வல்லவன், செய்தித்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.