இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் பகலந்துகொண்டனர்.
இதில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுதல், புதிய தொழில் திட்டங்களை தொடங்குவது மற்றும் தொழில்துறை சார்ந்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளன.
இந்த கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- “தமிழ்நாட்டில் 15,610.43 கோடி ரூபாய் அளவிலான புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 8,776 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வர உள்ளன. மேலும், எட்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.