வால்பாறை: வால்பாறை நகராட்சியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. கடந்த 2017- 2018ம் ஆண்டு வாடகை நிலுவை மற்றும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் நகராட்சி அலுவலர்கள் கடந்த சில வாரங்களாக வசூல் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நிலுவை செலுத்தாத 5க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று வாடகை வசூலில் ஈடுபட்ட அலுவலர்களை முற்றுகையிட்ட கடை உரிமையாளர்கள் முன்னறிவிப்பின்றி கடைகளுக்கு சீல் வைத்துவிட்டதாக கூறி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டனர். அதன்பின் நகராட்சி அலுவலர்களை மீட்டு நகராட்சி அலுவலகத்தில் அழைத்து பேசினர்.
இதில் வரும் 15ம் தேதிக்குள் நிலுவைகளை நகராட்சி மார்க்கெட் கடை வியாபாரிகள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘’சாலையோர கடைகள் பெருகிவிட்டதால் மார்க்கெட்டில் வியாபாரம் குறைந்துவிட்டது. சாலையோர கடைகளையும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் வியாபாரிகள் வந்து விற்பனை செய்து செய்வதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.