ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பகிரங்கமாக வெடித்து உள்ளது. இதன் பின்னர்,
– இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு, இருவருமே தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு முடிந்தது.
இதன் பிறகு கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் சேர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கலைக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று அதிரடி உத்தரவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நடந்த விசாரணையின்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என, தெரிவித்தனர்.
இதனால் அதிமுக வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுகவுக்கு ஏற்கனவே உரிமை கோரி ஒருபுறம் சசிகலா சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டே தொண்டர்களுடன் சந்திப்பு சுற்றுப்பயணம் என, எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக சசிகலா புத்தாண்டை ஒட்டி சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9ம் தேதி ‘ஆபரேஷன் சி’ என்ற பெயரில் செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சசிகலா தொண்டர்களை சந்திக்கிறார்.
இதற்காக சசிகலா வரும் 9ம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பி கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார்.
பின்னர், அங்கிருந்து மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவை வரவேற்க, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக முக்கிய இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் சசிகலா கையில் எடுத்து இருப்பதாக கூறப்படும் செங்கல்பட்டு ஃபார்முலா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாக, கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.