கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆதிரப்பள்ளி வாழச்சால் வனப்பகுதிக்கு விலங்குகளை போட்டோ எடுக்க கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புகைப்பட நிபுணர் ஒருவர் சென்றார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை தும்பிக்கையில் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் சென்று கொண்டிருப்பதை பார்த்தார். அந்த யானையால் தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. இதுகுறித்து புகைப்பட நிபுணர் கொடுத்த தகவல்படி, யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அதற்குள் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறொரு புகைப்பட நிபுணர் வனப்பகுதியில் வைத்து அந்த யானையை பார்த்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது யானையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. தும்பிக்கை அறுபடும் நிலையில் காயங்களுடன் யானை காணப்பட்டது. தற்போது வாழச்சால் வனச்சரகத்தில் உள்ள பெரிங்கல்குத்து அணை அருகே யானை இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை வனத்துறை தொடங்கியுள்ளது. ஆதிரப்பள்ளி பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக விவசாய நிலங்களை சுற்றி இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கின்றனர். எனவே, இந்த இரும்புக் கம்பிகள் தான் யானையின் தும்பிக்கையில் சுற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது பெண் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதிரப்பள்ளி வனசரக அதிகாரி லட்சுமி தெரிவித்தார்.