மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், விருதுநகர், நாமக்கல் உட்பட ஆவின் நிறுவனங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த 201 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-20ல், அதிமுக ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர் என 61 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்ததில் முறைகேடு புகார் எழுந்தது. அதிமுக ஆட்சியின்போது உயரதிகாரிகள், இந்த புகார்களை கண்டுகொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆவின் நிர்வாக இயக்குநராக சுப்பையன் நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக ஆவின் நிறுவனங்களின் அனைத்து கிளைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, சென்னை தணிக்கைப் பிரிவு இணை இயக்குநர் குமரேஸ்வரி தலைமையில் உதவி இயக்குநர்கள் (தணிக்கை) குழுவினர், தென் மாவட்டங்களில் உள்ள ஆவின் நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை கண்டறிய கடந்த ஆண்டு மதுரையில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த நியமனங்களின்போது ஆவின் மேலாளராக (நிர்வாகம்) இருந்த காயத்ரியிடம் (தற்போது திண்டுக்கலில் உள்ளார்) இக்குழு விசாரணை நடத்தியது.
இதில், பணி நியமனத்திற்கு 2019 ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை 17 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில், 25க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை காணவில்லை. மேலும் எவ்வித ஆவணமும் இல்லாமல் சிலரின் விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அவற்றில் முறையாக விண்ணப்பித்திருந்தவர்கள் கொடுத்த வங்கி டிடிக்களை இணைத்து மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பலருக்கு நேர்காணல் கடிதம் அனுப்பவில்லை. குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பலர், இந்த மோசடிகள் மூலம் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஒரே பகுதியை சேர்ந்த 17 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். அவர்கள் எழுத்துத்தேர்வின்போது பெற்ற மதிப்பெண்கள், விடைத்தாள்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆவணங்களை கைப்பற்றிய குழுவினர், அவற்றை நிர்வாக இயக்குநர் சுப்பையனிடம் வழங்கினர். இதன் அடிப்படையில் விஜிலன்ஸ் குழுவும் விசாரணை நடத்தி அறிக்கையை நிர்வாக இயக்குநரிடம் வழங்கினர்.
இதன் அடிப்படையில், கடந்த 2020ல் மதுரை ஆவினில் இனசுழற்சி முறையை பின்பற்றாமலும், பணி நிலைத்திறன் பட்டியல் அங்கீகரித்துப் பெறப்படாமலும், நிர்வாக நடைமுறை வீதிமீறல்கள் நடந்துள்ளது. இதனால் அப்போது, ஆவினில் நிர்வாக மேலாளராக இருந்த காயத்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்ட 47 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்று ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் தஞ்சாவூர் ஆவினில் 8 பேர், திருச்சி ஆவினில் 40 பேர், திருப்பூரில் 26 பேர், விருதுநகரில் 26 பேர், நாமக்கல்லில் 16 பேர் மற்றும் தேனி ஆவினில் 38 பேர் என 201 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுக்கு காரணமாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் ஆவின் செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் ஆவின் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்படுகிறது என்று சுப்பையன் அறிவித்துள்ளார்.
* முறைகேடுக்கு காரணமாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் ஆவின் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்படுகிறது.