சுதந்திரத்திற்குப் பின்னரான பொருளாதாரத்தில் மிகவும் சவால்மிக்க ஆண்டாக 2022ஆம் ஆண்டினை இலங்கை எதிர்கொண்டது.
2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் 2021இல் அதன்பின்னரான செயற்பாடுகள் மீதான அதன் நீடித்த தாக்கம், பாரியளவிலான சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியில் 2022இல் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன உள்ளடங்கலாக அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகள் காரணமாக தோற்றம்பெற்ற சவால்கள் முன்னெப்பொழுதுமில்லாத கொள்கைச் சமநிலைப்படுத்தல்களுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்து, தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்குக் கற்பனைசெய்ய முடியாதளவிலான இன்னல்களை ஏற்படுத்தின. வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்ட வேளையில் உண்மை வருமானங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இப்பொருளாதார அதிர்வுகளுடன் பின்னிப்பிணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் பல தசாப்தங்களாக நிலவிய கட்டமைப்புசார் பொருளாதாரத் தடைகள் பொருத்தமற்ற கொள்கைத் தெரிவுகளுடன் இணைந்து அதன்மூலம் பேரண்டப்பொருளாதார சமநிலையைத் தளர்த்தி தேசத்திற்கு சடுதியான மற்றும் பல்முனை கொண்ட பின்னடைவொன்றினைத் தோற்றுவித்தன.
பேரண்டப்பொருளாதார சமநிலையை மீட்டெடுக்கின்ற நோக்கில் 2022 காலப்பகுதியில் வேதனையளிக்கின்ற ஆயினும், தவிர்க்க முடியாத கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் கட்டாயப்படுத்தப்பட்டன. பணவீக்க அழுத்தங்கள் மோசமடைவதனைத் தவிர்க்கும் வேளையில் குறுகிய காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்குள் ஏதேனும் பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகளைத் தடுக்கும் பொருட்டு வட்டி வீதங்களில் முன்னெப்பொழுதுமில்லாத சீராக்கமொன்றினால் நாணயக்கொள்கை இறுக்கமாக்கப்பட்டது. மோசமான வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுப் படுகடனின் தற்காலிக இடைநிறுத்தலொன்று அறிவிக்கப்பட்ட வேளையில், பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாடொன்றிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஆதரவுடன் பொதுப் படுகடனை திரட்சிப்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த சில படுகடன் பணிக்கொடுப்பனவுகளின் இடைநிறுத்தலின் காரணமாக தவிர்க்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்கள் நட்புநேய நாடுகள் மற்றும் பல்புடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுடன் இணைந்து, துரிதமாக அதிகரித்துவருகின்ற சென்மதி நிலுவை அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக அவசியப்பட்ட தொழிற்பாட்டுசார் இடைவெளியை உருவாக்கத் துணைபுரிந்தன. இறக்குமதிகளின் முன்னுரிமைப்படுத்தல் உள்ளடங்கலாக ஏனைய பல்வேறு வழிமுறைகளினால் வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்கள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டன. ஏனையவற்றிற்கிடையில் எரிபொருள், நிலக்கரி, சமையல் எரிவாயு, மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் என்பன உள்ளடங்கலாக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான வெளிநாட்டுச் செலாவணியின் கிடைப்பனவை நிச்சயப்படுத்தியதன் மூலம் இவ்வழிமுறைகள் சமூகப் பொருளாதார அமைதியின்மையினைப் பெருமளவு குறைத்தன. அதேவேளை, 2022இன் முற்பகுதியில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க மிதமிஞ்சிய பெறுமானத்தேய்வினைத் தொடர்ந்து, சந்தைப் பங்கேற்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைச் செய்முறையொன்றின் மூலம் வெளிநாட்டுச் செலாவணி உறுதிப்பாடானது மீட்டெடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணியின் மீளனுப்பல் மற்றும் மாற்றுதல் ஆகிய தேவைப்பாடுகளுடன் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை மேம்படுத்தும் பொருட்டு மேலதிக வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உத்தியோகபூர்வமற்ற சந்தையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் ஊக்கமிழக்கச் செய்யப்பட்டன. அதேவேளை, நிதியியல் முறைமையில் உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் பொருட்டு வழிமுறைகளின் அணிவரிசையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீதான ஏதேனும் பாரிய செயல் விளைவுகள் தவிர்க்கப்பட்டன. மேலும், பொருளாதாரத்தின் நீடித்துநிலைத்திருக்கின்ற மீட்சியொன்றினை நிச்சயப்படுத்துவதில் இன்றியமையாதனவாக விளங்குகின்ற இறைத் தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் காணப்படுகின்ற கட்டமைப்புசார் குறைபாடுகளைத் திருத்துவதற்காக காலம் கடந்த சீராக்கங்களை அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
முழுவடிவம்