புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற 11 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொய்த்ரா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்குகளின் விசாரணைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக நீதிபதி பெலா எம் திரிவேதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை நீதிபதி பெலா எம் திரிவேதி அங்கம் வகிக்காத அமர்வில் பட்டியலிடும்படி, நீதிபதி அஜய் ரஸ்தோகி உத்தரவிட்டார். முன்னதாக, 11 பேரை முன்கூட்டிய விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த ரிட் மனு கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் அந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை விடுவித்துக் கொண்டார். 2வது முறையாக அவர் விசாரணையில் இருந்து விலகியதற்கும் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.