“பழைய வாதங்களையே மீண்டும் முன்வைக்காதீர்கள்” – அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: “அதிமுகவில் கடந்த 2022 ஜூலை 11-க்கு முன்னர் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே மீண்டும் தொடர வேண்டும்” என்று ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், கட்சிப் பணிகள் தேக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா? வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள் யார் யார்? கட்சியில் என்னென்ன பொறுப்பு வகிக்கின்றனர்? இடைக்கால பொதுச் செயலாளர் என்பவர் தேர்தல் நடந்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இபிஎஸ் தரப்பில், இடைக்கால பொதுச் செயலாளர் கட்சியின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில், “அந்த இரு பதவிகளுக்கும் கட்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இரு பதவிக்கும் ஒருமித்த கருத்துடன் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டது. மேலும் “கடந்த ஜூலை 11-ல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது. முறையாக வழிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லுபடியாகாதவை” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது இபிஎஸ் தரப்பில், “கட்சி விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டம் முடியும். அதன்படி தான் கடந்த ஜூலை மாதம் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. எனவே அந்தப் பொதுக்குழு சட்டவிரோதமானது அல்ல.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்தவொரு மனுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அதனை கருத்தில் கொள்ள தேவையில்லை” என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பொதுக்குழுவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் அதன் கீழ் வரும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றனர்.

அதற்கு இபிஎஸ் தரப்பில், ஒபிஎஸ் கட்சி கோட்பாடுகளுக்கு மாறாக எதிர்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. அதனை கருத்தில் கொள்ள வேண்டிய தேவையும் நீதிமன்றத்துக்கு இல்லை. ஆதரவளிப்பது என்பது அவரவர் விருப்பம் என்று தெரிவித்தனர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், “ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் தொடர்பான ஆவணங்களில் கூட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து, புதிய அவை தலைவரை தேர்ந்தெடுத்து அடுத்த பொதுக்குழு செயற்குழுவிற்கு தேதியை அறிவித்தனர். இது சட்டவிரோதமாகும்” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “2022 ஜூலை 11-ம் தேதிக்கு பின்னர்தான் அனைத்தும் மாறியது. அப்படியென்றால் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்று ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில், கடந்த 2022 ஜூலை 11-க்கு முன்னர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றிருந்த நிலையே மீண்டும் தொடர வேண்டும். அதிமுக கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து அந்தப் பதவிகளை உருவாக்கி செயல்பட்டு வந்த நிலையில், அந்த பதவிகளை செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை இந்த வாரமே நாங்கள் முடிக்க விரும்புகிறோம். அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கெனவே வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் எடுத்துவைக்கக் கூடாது” என அறிவுறுத்தி நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமை (ஜன.5) பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.