நாடு விட்டு நாடு சென்று நூதன முறையில் கொள்ளை; இந்திய வம்சாவளி நபருக்கு 12 சவுக்கடி, சிறை தண்டனை

சிங்கப்பூர்,

சிங்கப்பூருக்கு கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து 9 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்துள்ளது. அவர்கள் முன்பே திட்டமிட்டபடி பல குழுக்களாக பிரிந்து, குறிப்பிட்ட நபரை கண்காணித்து வந்துள்ளனர். இதன்பின்னர், தங்களது கொள்ளைக்கு தேவையான கார் ஒன்றை திருடியுள்ளனர்.

அதன்பின்பு, போலீசாரிடம் சிக்க கூடாது என்பதற்காக கை விரல்களின் முனை பகுதியில் பிளாஸ்டர்களை ஒட்டி கொண்டனர். முகமூடி அணிந்து கொண்டனர். இதன்பின்பு, சிங்கப்பூரில் பணம் பரிமாற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்நாட்டை சேர்ந்த 35 வயதுடைய மேலாளரை மிரட்டி அவரிடம் சிங்கப்பூர் டாலரில் 6.24 லட்சம் மதிப்பிலான வெவ்வேறு நாட்டு கரன்சிகளை கொள்ளையடித்தனர்.

இதன்பின்னர் நாட்டை விட்டே வெளியேறி மலேசியாவுக்கு தப்பினர். இவர்களில் ஒருவர் சிவராம் மணியன் (வயது 36). இந்திய வம்சாவளியான இவர் மீது நடந்த வழக்கு விசாரணையில், சிங்கப்பூர் கோர்ட்டு 12 சவுக்கடி, 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

இந்த வழக்கில் மற்ற அனைவரும் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் விக்னேஸ்வரன் சேகரன், சரவண குமார் கருணாநிதி ஆகிய 30 வயதுடையோருக்கும், இதே தண்டனை விதிக்கப்பட்டது. செல்வம் கருப்பையா (வயது 32) என்பவருக்கு 5 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனையும், 12 சவுக்கடியும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியான மலேசியர்களான மற்ற 3 கொள்ளைக்காரர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி உள்ளனர். சிங்கப்பூரில் கும்பல் கொள்ளை சம்பவத்திற்கு தண்டனையாக 5 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடியும் வழங்கப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.