மங்களூரு:-
பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல், மங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பா.ஜனதா தொண்டர்கள் சாலை, வடிகால் பற்றி விவாதிக்க வேண்டாம் என்றும், லவ் ஜிகாத் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கு பதில் அளித்து முன்னாள் மந்திரியும், மங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை அக்கட்சியினர் செய்து வருகிறார்கள். இரட்டை என்ஜின் என்பது வகுப்புவாதம், மக்களுக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளது. இந்த இரட்டை என்ஜினின் உண்மையான அர்த்ததை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இரட்டை என்ஜின் ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது. கர்நாடகத்தில் இருந்து இதனை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பி.பி.எல். கார்டுகள் வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 108 ஆம்புலன்சுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. புதிதாக ஆம்புலன்சுகள் வாங்கப்படவில்லை. நமது நாடு கொரோனா பேரழிவை சந்தித்துள்ளது. அடுத்த அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளோம். ஆனால் நோய் தொற்றை தடுக்க எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. ஆக்சிஜன் ஆலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. கால்நடை ஆம்புலன்சுகள் சரியாக இயக்கவில்லை. அந்த ஆம்புலன்சுக்கு மருத்துவரோ, ஓட்டுநர்களோ நியமிக்கப்படவில்லை என்றார்.