“மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா?!" – விளக்கும் ஹெச்.ராஜா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தின் வழியே செல்லும் வைப்பாற்றில் அரசு மணல்குவாரி அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், வைப்பாற்றில் மணல்குவாரி அமைக்க அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், மணல்குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பாதிக்கப்படும், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு வறட்சி உண்டாகும், மண்ணின் கனிம வளச் சத்துகள் நீர்த்துப்போகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அமைப்பினர் மணல்குவாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வைப்பாற்றில் அரசு மணல்குவாரி அமைப்பதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டம்

போராட்டத்தையடுத்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், இருக்கன்குடி வைப்பாற்றில் மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிடவேண்டும். இந்தப் பகுதியில் மணல்குவாரி அமையும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எதிர்ப்புகளை மீறி இங்கு மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிடவில்லை எனில், என் தலைமையில் பா.ஜ.க-வினர் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். கோயில் நிர்வாகங்களை ஆய்வுசெய்ய அறநிலையத்துறை சார்பில் குழு அமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், கோயில்களில் ஆய்வுசெய்ய யார் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம் மாறியிருப்பதாகக் கூறும் சூழ்நிலையில் கோயில் நிர்வாகத்தை ஆய்வுசெய்ய குழு அமைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுநலன் என்ற போர்வையில் கோயில் நிதியை ஆன்மிகம் தவிர்த்த எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது.

ஆலோசனை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பட்டியலில் தீபாவளி, பொங்கல் பண்டிகை இல்லை. ஒருகாலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க இல்லை என்று சொன்ன காலம் போய் இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சிபோல் பா.ஜ.க செயல்படுகிறது. காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டிருந்தால் தனிப்பட்ட முறையில் மாநிலத் தலைமையிடமோ அல்லது தேசியத் தலைமையிடமோ தெரிவித்திருக்கலாம். எனவே, கட்சிப் பிரச்சனை குறித்து பொது இடத்தில் விவாதிக்க மாட்டேன். கட்சி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசியத் தலைமை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்தியாவிலுள்ள 544 தொகுதியிலும் நிற்க தகுதியான நபர் என்றால், அது பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. அப்படி அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இது பற்றி எந்த முடிவும் பா.ஜ.க தலைமையிடத்திலிருந்து அறிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க மாநிலத் தலைவராகச் செயல்படுவதற்கு அண்ணாமலை தகுதி இல்லாதவர் என தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இந்த வேளையில், முதலில் தி.மு.க தலைவராக இருப்பதற்கு முதல்வர் மு.க‌.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே, பா.ஜ.க கட்சியைப் பற்றி அவர் பேசத் தேவையில்லை. அமைச்சர் கே.என்.நேரு, `இன்பநிதிக்கு குடைபிடிப்பேன்’ என்று சொல்வதிலிருந்தே தி.மு.க சுயமரியாதை இல்லாதவர்களின் கட்சி, தி.மு.க-வுக்கு சுயமரியாதை என்பதே கிடையாது எனத் தெரிகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.