பீஜிங்,
சீனாவில் ‘பிஎப்.7’ என்ற உருமாறிய கொரோனாவின் அலை எழுச்சி பெற்று வருகிறது. தினமும் பல லட்சம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும் ஆய்வுத்தகவல்கள் வெளியாகின. சீனா கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக தகவல்களைத் தர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறியது. இந்த தருணத்தில் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங், பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த பெருந்தொற்று விவகாரத்தை அரசியல் ஆக்கும் வார்த்தைகளை, செயல்களை தவிர்க்க வேண்டும். தொற்றை கூடிய விரைவில் தோற்கடிப்பதில் ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.