திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறுகள், பானைகள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்தது. வீரணன் என்பவரது நிலத்தில் 9 குழிகள் தோண்டப்பட்டு தங்க காது குத்தும் ஊசி, கருப்புநிற செஸ் காயின், நீள் வடிவ தாயக்கட்டை, 14 அடுக்கு உறை கிணறு, பானைகள், பானைகளை தூண்களாக கொண்ட நீண்ட சுவர் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
இவற்றை காட்சிப்படுத்துவதற்காக கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கல் திருநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார். எனவே அருங்காட்சியக உள் அலங்கார பணிகள் வேகமெடுத்துள்ளன. உறை கிணற்றை அப்படியே காட்சிப்படுத்த தொல்லியல் துறை சார்பில் ஒவ்வொரு உறைகளாக எடுத்து அருங்காட்சியகத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பானைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன.