கீவ்,
உக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க் நகரில் மகீவ்கா பகுதியில் ரஷிய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது புது வருட தொடக்க நாளான கடந்த ஞாயிற்று கிழமை உக்ரைனிய படைகள் நள்ளிரவில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டன.
இதில் ஹிமார்ஸ் வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வகையை சேர்ந்த மொத்தம் 6 ராக்கெட்டுகள் வான்வழி தாக்குதலை நடத்தின.
இந்த சம்பவத்தில் 400 ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளனர். 300 வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என உக்ரைன் முதலில் கூறியது. ஆனால், இதனை ரஷியா மறுத்துள்ளது.
இந்த தாக்குதலில் 89 வீரர்கள் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில், துணை தளபதி மட்டத்திலான லெப்டினன்ட் ஜெனரல் பசூரின் உயிரிழந்து உள்ளார் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற தாக்குதல் மற்றும் உயிரிழப்பு விவரங்களை ரஷியா ஒப்பு கொள்ளாத சூழலில் இந்த தகவலை ரஷிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.