எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சிவகுமார் நடேசன் அவர்களை 2023ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதுக்காக (PBSA) இந்திய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.
இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதி உயர் கௌரவமே பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை இந்தூரில் நடைபெறும் 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின்போது மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருது வழங்கப்படும்.
2. குடியரசுத் துணைத் தலைவர் ஶ்ரீ ஜெகதீப் தன்கர் அவர்களை தலைவராகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்ட ஜூரிக்கள் சபையானது, திரு சிவகுமார் நடேசன் அவர்களை இந்த உயர் கௌரவத்துக்காக தெரிவு செய்திருந்தது. உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளிலும் சிறந்துவிளங்கி சாதனைபுரிந்த இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் சிறப்பை இந்த பிரவாசி பாரதிய சம்மான் விருது அங்கீகரிக்கின்றது.
3. சமூக நலனுக்காக வழங்கிய பங்களிப்புக்காக திரு நடேசன் அவர்கள் இவ்விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமையத்தின் இலங்கை பிரிவின் தற்போதைய தலைவரான அவர் சமூக நலனுக்காக அயாரது உழைத்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் பெருநோய் தாக்கிய காலப்பகுதியில் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பு திட்டம் ஒன்றையும் அவர் ஆரம்பித்திருந்தார்.
4. அத்துடன், இலங்கை இந்தியா இடையிலான கலாசார மற்றும் வர்த்தக பரிமாற்றங்களையும், உறவுகளையும் மேம்படுத்துவதற்கு பங்களிப்பினை வழங்கிவரும் அவர், இலங்கையில் ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்காக பல்வேறு இந்திய கலைஞர்களை அழைத்துவருவதில் முக்கிய வகிபாகத்தையும் கொண்டிருக்கின்றார். இலங்கையில் கர்நாடக சங்கீதம் போன்ற பாரம்பரிய துறைகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புக்களிலும் அவர் தனது ஆதரவினை வழங்கியுள்ளார். மேலும், பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடுகளில் பல்வேறு தடவைகள் உரை நிகழ்த்தியிருந்த அவர், 2019 இல் நடைபெற்ற கும்ப மேளாவில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களைச் சந்திப்பதற்காகவும் அழைக்கப்பட்டிருந்தார்.
5. திரு நடேசன் அவர்கள் இந்த உயரிய விருதினைப் பெறும் இரண்டாவது இலங்கைப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை வர்த்தகத்துறையில் பெறுமதிமிக்க சேவையினை ஆற்றியமைக்காக 2011இல் திரு மனோ செல்வநாதன் அவர்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
04 ஜனவரி 2023.