புதுடெல்லி: டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண் மது குடிக்கவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவரது குடும்ப டாக்டர் தெரிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த இளம் பெண் அஞ்சலி சிங் (20). கடந்த 1ம் தேதி அதிகாலையில், கஞ்சவாலா பகுதியில் இவர் சென்ற ஸ்கூட்டியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 12 கிமீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து,அஞ்சலியின் தோழி நிதி அளித்த பேட்டியில், ‘‘புத்தாண்டு இரவில் ஒரு ஓட்டலில் நண்பர்களை சந்திக்க அஞ்சலி சென்றார். பார்ட்டி முடிந்த பின்னர் மது குடித்திருந்த அஞ்சலி வண்டியை ஓட்ட விரும்பினார். வண்டியை ஓட்ட வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன். நாங்கள் சென்ற வண்டியின் மீது அந்தக் கார் மோதியது. என் தோழி காருக்கு முன்னால் சிக்கிக் கொண்டார். பெண் சக்கரத்தில் சிக்கியிருப்பது ஓட்டுநருக்கு தெரியும். அதுதெரிந்தும் வேண்டுமென்றே தான் அவளை கொன்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்த பின்னர் அதிர்ச்சியில் யாரிடமும் கூறவில்லை’’என்று தெரிவித்திருந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாஜ நிர்வாகி மானோஜ் மிட்டல் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்ப மருத்துவர் பூபேஷ்கூறுகையில்,‘‘ சம்பவத்தன்று அஞ்சலி குடித்ததாக கூறப்படும் தோழியின் கூற்று தவறானது. பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் மது குடிக்கவில்லை’’ என்றார்.