சேலம்: தொடர் மழையால் கடலைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், கடலை எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 அதிகரித்துள்ளதாக தாவர எண்ணெய் வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் தாவர எண்ணெய்களின் தேவைகளை வெளிநாடுகள் அதிகளவில் பூர்த்தி செய்கிறது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாதமாக எண்ணெய் வரத்து அதிகரிப்பால் பாமாயில் லிட்டர் ரூ.95 வரை சரிந்தது. அதேபோல் சன்பிளவர் ஆயில் ரூ.150 என குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாவர எண்ணெய்களின் வரத்து சற்று சரிந்துள்ளது. அதேபோல் வௌிநாடுகளில் இருந்து வரவேண்டிய எண்ணெய் 10 முதல் 15 சதவீதம் வரை சரிந்தது. இதன் காரணமாக தாவர எண்ணெய்களின் விலை அதிகரித்து, ரூ.95க்கு விற்ற பாமாயில் தற்போது ரூ.100 என கூடியுள்ளது.
அதேநேரத்தில் கடந்த சில மாதமாக பெய்த மழையால் கடலைக்காய் ஒரு பருவம் சாகுபடி நடைபெறவில்லை. அதேபோல் எள் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தைவிட இம் மாதத்தில் கடலை எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.180க்கு விற்ற ஒரு லிட்டர் கடலை எண்ணெய், தற்போது லிட்டருக்கு ரூ.20 அதிகரித்து ரூ.200 என்றும், 10 லிட்டர் கொண்ட ஒரு பெட்டி ரூ.200 வரையும் உயர்ந்துள்ளது. ரூ.280 முதல் ரூ.300வரை விற்ற நல்லெண்ணெய் ரூ.300 முதல் ரூ.330 என்றும், தேங்காய் எண்ணெய் ரூ.180 முதல் ரூ.200 என்றும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.