தமிழ்நாட்டில் கடந்த சட்ட மன்ற தேர்தலில், திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்பட முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
எனவே இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்து வருகின்றன.
அதே சமயம் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது பெண் வாக்காளர்களை பெரிதாக கவர்ந்தது என்பதை திமுகவினரே கூட மறுக்க மாட்டார்கள் என்கிற பேச்சும் உள்ளது.
இந்த சூழலில் திமுக வெற்றி பெற்றவுடன் ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என, குடும்ப தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கபடாமல் உள்ளதால் பெண்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஒருபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மறுபுறம் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி உடனே நிறைவேற்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது? என்பது பற்றி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
அப்போது ‘குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் தொடர்பாக கணக்கெடுக்கும் பணி 85 சதவீதம் முடிந்துவிட்டது. வரும் 2023 பட்ஜெட்டில் இந்த தொகை குறித்து தமிழ்நாடு முதல்வர்
அறிவிப்பார்’ என, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலை, புதிய அறிவிப்புகள், அரசு திட்டங்களின் பலன் குறித்து, ஆளுநர் உரையில் இடம் பெற இருக்கும் அம்சங்களை இறுதிச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று மரபுப்படி ஆளுநரின் உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த கூட்டத்தொடர்களின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் அறிவிக்க உள்ள துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் மற்றும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
எனவே குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுவதால் தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.