புதுடில்லி, நியூயார்க்கில் இருந்து புதுடில்லி வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, குடிபோதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது.
மாற்று உடை
பயணியருக்கு மதிய உணவு அளிக்கப்பட்ட பின், விளக்குகளின் வெளிச்சம் குறைக்கப்பட்டு அனைவரும் துாங்க தயாராகினர்.
அப்போது, ‘பிசினஸ் கிளாஸ்’ வகுப்பில் இருந்த பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அதன் பின்னும் தன் இருக்கைக்கு செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சக பயணியர் சத்தம் போட்டதை அடுத்து, அவர் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 70 வயது பெண்ணின் ஆடைகள் மற்றும் உடைமைகள் சிறுநீரில் நனைந்து நாற்றம் அடிக்க துவங்கின. விமானப் பணியாளர்கள் மாற்று உடை அளித்து உள்ளனர்.
மாற்று இருக்கை இல்லாததால், அந்தப் பெண், பணியாளர்களின் இருக்கையில் அமர்ந்து ஐந்து மணி நேரம் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
புகார் கடிதம்
புதுடில்லி வந்து சேர்ந்ததும், சிறுநீர் கழித்த பயணி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் எந்த விசாரணையும் இன்றி வீட்டுக்கு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதாகவும், இத்தனை மோசமான விமான பயணத்தை இதுவரை மேற்கொண்டதில்லை எனவும், ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனுக்கு, பாதிக்கப்பட்ட பெண் புகார் கடிதம் அனுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சிறுநீர் கழித்த பயணி மீது, ஏர் இந்தியா நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்ததுடன், சம்பந்தப்பட்ட பயணி 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்