போபால்: மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் சட்டவிரோத ஓட்டல் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஜகதீஷ் யாதவ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மிஷ்ரி சந்த் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான மிஷ்ரி சந்த் குப்தா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். கொலை வழக்கை தொடர்ந்து மிஷ்ரி சந்த் குப்தா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சாகர் நகரில் குப்தாவுக்கு சொந்தமான 5 மாடி ஓட்டல் கட்டிடம் நேற்று முன்தினம் வெடிபொருள் வைத்து தகர்க்கப்பட்டது.
ஜெய்ராம் பேலஸ் என்ற இந்த ஓட்டலை இடிக்க இந்தூரில் இருந்து சிறப்புக் குழு வந்திருந்தது. அவர்கள் கட்டிடத்தில் வெடிபொருட்களை பொருத்த 12 மணி நேரம் வரை ஆனது. இதையடுத்து சில வினாடிகளில் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஓட்டலை இடிக்க 80 கிலோ வெடிமருந்து மற்றும் 85 ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு மாடி வணிக வளாகத்திற்கு அனுமதி பெறப்பட்ட இடத்தில் 5 மாடி ஓட்டல் கட்டப்பட்டு இயங்கி வந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.