புதுடில்லி, புதுடில்லியில் புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த பெண், மது அருந்தி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மது அருந்தவில்லை என, பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு தினமான ஜன., 1ம் தேதி அதிகாலையில், புதுடில்லியின் சுல்தான்புரி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது கார் மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அஞ்சலி சிங், 20, என்ற பெண் கார் சக்கரத்தில் சிக்கிய நிலையில், அவரது உடல், 12 கி.மீ., துாரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டது.
கஞ்ச்ஹவாலா என்ற இடத்தில் கார் நின்றதும், அவரது உடல் நிர்வாண நிலையில் சாலையில் விழுந்தது. இதில், அவரது உடல் பாகங்கள் சிதறியும், நசுங்கியும் இருந்தன.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்பட்டபோது, அஞ்சலி சிங் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் அவருடன், நிதி என்ற அவரது தோழியும் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
விபத்து நடந்ததும், அந்த பெண் சம்பவ இடத்தைவிட்டு சென்றுள்ளார்; போலீசுக்கும் தகவல் கொடுக்கவில்லை. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:
ஹோட்டலில் இருந்து புறப்படும் போது அஞ்சலி மது அருந்தி இருந்தார். நான் பின்னால் அமர்ந்து இருந்தேன். தாறுமாறாக ஓட்டியதில் ஒரு லாரி மீது மோதி இருப்போம்.
நான் ஓட்டுவதாக கூறியும் அஞ்சலி மறுத்துவிட்டார். வரும் வழியில் விபத்து நேர்ந்தது; அதிர்ச்சியில் என்ன செய்வது என புரியவில்லை. அதனால், சம்பவ இடத்தை விட்டு சென்றுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரது கருத்துக்கு, புதுடில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கண்டுபிடிக்கும் வரை, அஞ்சலியின் தோழி நிதி அமைதி காத்தது ஏன்? அவர் கூறுவதை விசாரிக்க வேண்டும். மிகுந்த வலியுடன் கொடூரமாக உயிரிழந்த பெண்ணை ஒழுக்கமற்றவர் என முத்திரை குத்தாதீர்கள்,” என்றார்.
இந்நிலையில், அஞ்சலி சிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகளை அவரது உறவினர் வெளியிட்டார். அதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த விபத்து எவ்வளவு கொடூரமாக நடந்துள்ளது என்பதை பிரேத பரிசோதனை முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன.
இதை விபத்து என கூறுவதை விட, மிக மோசமான படுகொலை என்றே கூற வேண்டும். அஞ்சலியின் மூளை கிடைக்கவில்லை என, பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
அவர் மது அருந்தியதற்கான எந்த தடயமும் வயிற்றில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவரது உறவினர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்