2024 ஜன. 1ல் அயோத்தி ராமர் கோவில் திறப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!

“2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. மேலும், அயோத்தியில் வேறொரு இடத்தில் மசூதி கட்ட முஸ்லீம் சமூகத்தினருக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் கலந்து கொண்டார். இதன்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் பேட்டி அளித்த உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. விரைவில் கோவில் தயாராகி விடும்,” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், “2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக திரிபுரா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “நீதிமன்றங்களில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் தடையாக இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். அயோத்தியில் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படும்,” எனக் கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆண்டு தொடக்கத்தில் ராமர் கோவில் திறக்கப்படும் என, பாஜக அறிவித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.