அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் மதிய உணவில் கோழி மற்றும் பருவகால பழங்களை சேர்த்துள்ளது மேற்கு வங்க மாநில அரசு. மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். இதற்கான செலவை 60:40 விகிதத்தில் மாநிலமும் மத்தியமும் பகிர்ந்து கொள்கின்றன. பள்ளிகளில் மதிய உணவின் ஒரு பகுதியாக தற்போது மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மெனுவில் கூடுதலாக கோழி கறி மற்றும் பழங்களை சேர்த்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
மத்திய அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் கூடுதல் ஊட்டச்சத்துக்காக கோழி மற்றும் பருவகால பழங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்காக மாநில அரசு கூடுதலாக 371 கோடியை ஒதுக்கியுள்ளது. 4 மாதத்துக்கு பிறகு மீண்டும் இந்த திட்டம் தொடருமா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. வாரத்தின் வெவ்வேறு நாட்களில் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் இந்த ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் 2024 இல் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தேர்தலை வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தை நான்கு மாதங்களுக்கு கொண்டு வந்துள்ளதாக பாஜகவினர் விமர்சிக்கின்றனர். மேலும், தேர்தலுக்கு முன்னதாக பள்ளிக் குழந்தைகளுக்கு கோழிக்கறி வழங்கும் முடிவு திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. சமீபகாலம் வரை ஏழைக் குழந்தைகளுக்கு ஏன் இந்த பொருட்கள் கிடைக்காமல் அரிசியும் பருப்பும் மட்டும் கொடுக்கப்பட்டது? பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வருவதால் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் நோக்கம்தான்” இது என்று பாஜக மாநில தலைவர் ராகுல் சின்ஹா குற்றம் சாட்டினார்.
பாஜகவின் விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஎம்சியின் ராஜ்யசபா எம்பி சாந்தனு சென் கூறியதாவது; பாஜக ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் செய்ய விரும்பும் கட்சி. கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட மதிய உணவு திட்டத்தை எங்கள் அரசு நிறுத்தவில்லை என அவர் கூறினார்.