சென்னை: அதிமுக விதிமுறைகளில் பழனிசாமிக்கு ஏற்றபடி மாற்றம் உருவாக்கி, அதன் மூலம் குறுக்குவழியில் பொதுச்செயலாளர் பதவியை பெற பழனிசாமி முயல்வதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23ல் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அதன்பின், ஜூலை 11ல் நடந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.
கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து பன்னீர் செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜன.,5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், 2011 டிசம்பரில் வரையறுக்கப்பட்ட அதிமுக சட்ட விதிகளை சுட்டிக்காட்டியதுடன், அதிமுக.,வில் தற்போது திருத்திய விதிகளுக்கும், பழைய விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணத்தையும் சமர்பித்தனர்.
அப்போது நீதிபதிகள், ‛பொதுச்செயலருக்கான பொறுப்பு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்பட்டது எப்படி’ என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அதற்காக மேற்கொள்ளப்பட்ட விதிமுறைகளை ஓபிஎஸ் வழக்கறிஞர் படித்து காட்டினார். ]
குறிக்கிட்ட நீதிபதிகள், ‛பொதுச்செயலர் பொறுப்பை மாற்றி இரட்டை தலைமையை உருவாக்கியது பொதுக்குழுவா?’ எனக் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் வழக்கறிஞர், ‛ஆம்’ என பதிலளித்தனர். ‛அதிமுக.,வில் செயற்குழு என்றால் என்ன? அதன் பணிகள் என்ன?’ என்ற நீதிபதிகளின் கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பு விளக்கமளித்தது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
பின்னர் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி தேவைப்பட்டு இருக்காது. அப்போதே செய்யாத பழனிசாமி, தற்போது பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர முயல்வது அதிமுக.,வின் சட்ட விதிகளுக்கு முரணானது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் முக்கியமானவர்கள்.
கட்சி தலைமை அலுவலகம், தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் அசையும் அசையா சொத்துக்கள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பவர்களால் தான் அதிகாரம் செலுத்த முடியும். ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு சட்டவிரோதம். ஜெயலலிதா அதிமுக.,வின் தாய், அந்த இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியினர் நிலைப்பாடு.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. ஆனால் அதை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார். இதற்கு பழனிசாமி நியாயமான முறையில் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தலைமை அலுவலக பொறுப்பில் 10 ஆண்டு இருந்தவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் பொதுச்செயலாளர் பதவிக்கு பழனிசாமி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என திருத்தியுள்ளனர். இந்த விதி, இபிஎஸ்.,க்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்.,ஐ கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்தனர். ஓபிஎஸ்.,சை நீக்கப்பட்டுவிட்டதால் பொதுச்செயலாளர் பதவிக்கு இபிஎஸ் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
மீண்டும் ஒத்திவைப்பு
சுமார் 2 மணி நேரமாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‛நாளை அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்யு வேண்டும்’ என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நாளை மதியம் 12 மணிக்கு ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்