மத்தியப் பிரதேசத்தின், போபாலில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியின் விடுதியொன்றில், 24 வயது பெண் மருத்துவரொருவர் தனக்குத்தானே ஊசி மூலம் நான்கு டோஸ் மயக்க மருந்து (Anaesthesia) செலுத்திக்கொண்டு உயிரிழந்ததாக போலீஸார் இன்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, காந்தி மருத்துவக் கல்லூரியின் (ஜி.எம்.சி) விடுதியில் பெண் மருத்துவர் தற்கொலை செய்திருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர், குழந்தை மருத்துவ (paediatrics stream) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்துவந்திருக்கிறார். புதன்கிழமை காலை முதலே பெண்ணின் விடுதி அறை மூடப்பட்டிருந்ததையடுத்து, மாலை வந்துபார்த்த சக மாணவிகள் விடுதியின் நிர்வாகத்திடம் கூறியிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட விடுதிக்கு வந்த போலீஸார், அறையின் கதவை உடைத்துப் பார்த்தபோது பெண் மருத்துவர் உயிரிழந்து கிடந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த ஊசி குப்பிகள், ஒரு சிரஞ்சை போலீஸார் கைப்பற்றினர். அந்த அறையில், `மனதளவில் நான் பலமாக இல்லை. என்னால் பதற்றத்தைச் சமாளிக்க முடியவில்லை’ என்று எழுதப்பட்டிருந்த தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதில், `இதற்கு யாரும் பொறுப்பல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய போலீஸ் அதிகாரி விஜய் சிசோடியா, “அந்தப் பெண் தனக்கு தலா 2.5 மில்லி அளவுக்கு மயக்க மருந்தை நான்கு டோஸ் செலுத்தியிருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றோம்” என்று தெரிவித்தார்.