வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி பெருவிழா ஜன.,14 நடைபெற உள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆங்காங்கே நடைபெறும் சமையலால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க இன்று முதல் பக்தர்கள் பெரிய பாத்திரங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரஜோதி பெருவிழாவுக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக உள்ளனர். மகரஜோதி நாளில் கடந்த ஆண்டுகளில் பம்பை மற்றும் புல்மேட்டில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஜோதி தெரியும் இடம் எல்லாம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜன.,12 க்கு பின்னர் பக்தர்களின் கியூ மரக்கூட்டம் தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஜன.,10 முதல் பக்தர்களில் பலர் ஜோதி தரிசனத்துக்காக மலையில் தங்குவார்கள் என்று போலீஸ் கணக்கிடுகிறது. இவ்வாறு தங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
ஜன.,13,14 தேதிகளில் தினமும் ஒரு லட்சத்தக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சன்னிதான சுற்றுப்புறங்களிலும், காடுகளிலும் தங்கும் பக்தர்கள் உணவு சமைக்கும் போது தீ விபத்து ஏற்படுவதை தடுக்க இன்று முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து பெரிய பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கூடுதல் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கும் படி தேவசம்போர்டுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சன்னிதானத்தில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) தலைமையில் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜோதி முடிந்த பின்னர் பக்தர்கள் திரும்புவதற்கு ஆயிரம் பஸ்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 260 பஸ்கள் ஓடுகின்றன. மேலும் 800 பஸ்களை பத்தணந்திட்டை, எருமேலி, பொன்குன்னம் போன்ற இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement